சென்னை வேளச்சேரி ஏரி வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. மற்றொரு புறம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத்தலைவர் குமாரதாசன் என்பவர் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. 

இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், “மழை வெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரியைப் பாதுகாக்கும் வகையில் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 118 ஏக்கர் நிலத்தில் ஏன் ஏரி அமைக்கக்கூடாது?. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதே சமயம் இந்த 118 ஏக்கர் நிலம் பசுமை பூங்கா அமைக்க தோட்டக்கலைத்துறைக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் சத்தியகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (15.07.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தபடி இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து தலைமைச் செயலாளரிடம் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது எனத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.