Skip to main content

“கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு இடைக்காலத் தடை” - உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

"Interim ban on construction of kallakurichi collector's office" - High Court order

 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் என்னுமிடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கை விசாரித்த  உயர் நீதிமன்றம், உரிய அனுமதிகளையும் ஒப்புதலையும் பெறாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டது.

 

ஆனால், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக ரங்கராஜன் நரசிம்மன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி அதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் தரப்பில், சுற்றுச்சூழல் மற்றும் நகரமைப்பு திட்ட இயக்குநர் அனுமதி பெற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் இருப்பதால் இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டலாமா? கூடாதா என முதலில் முடிவெடுக்க வேண்டியுள்ளதாக கூறிய நீதிபதிகள், ஆட்சியர் அலுவலகம் கட்டுவற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்