Skip to main content

சென்னையில் திருடுபோன பைக் திருச்சியில் சிக்கிய சுவாரஸ்யம்

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

Interesting that the stolen bike in Chennai was caught in Trichy!

 

திருச்சி மாநகர விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் கருணாகரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன், பாலசரஸ்வதி உள்ளிட்ட குழுவினர் கருமண்டபம் அசோக் நகர்ப் பகுதியில் அண்மையில் சோதனை மேற்கொண்டனர். இதில் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கரூர் மாவட்டம் செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை வைத்து திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த ஐ. ஜான் என்கிற பிலோமிநாதன் என்பவர் பாலியல் தொழில் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பிலோமிநாதனை கைது செய்து, அவர் வைத்திருந்த உயர் ரக இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த இருசக்கர வாகனம் நண்பருடையது என அவர் கூறியதையடுத்து, வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் வாகன உரிமையாளரின் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை ஒப்படைத்து இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் அதன் பின்னர் பல நாட்களாகியும் வாகனத்தின் ஆவணங்களுடன் யாரும் வாகனத்தை மீட்க முன் வரவில்லை.

 

இதனால் சந்தேகமடைந்த போலீசார், இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை (சுரண்டி அழிக்கப்பட்டிருந்தது) கண்டறிந்து, அந்த வாகனம் குறித்த விவரங்களை இணைய வழியில் சோதனை செய்தபோது, அது சென்னை கிரீம்ஸ் சாலை திடீர் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஆர். ராஜேஷ் என்பவருக்குச் சொந்தமான வாகனம் என்பது தெரிய வந்தது. அதிலிருந்த உரிமையாளரின் தொடர்பு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த வாகனம் கடந்த ஏப்ரல் மாதம் கோடம்பாக்கம் பகுதியில் நிறுத்தியிருந்தபோது மாயமானதும் அது தொடர்பாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் தெரிய வந்தது.


இதனையடுத்து கோடம்பாக்கம் போலீசார் பரிந்துரையின் பேரில், திருச்சி விபச்சாரத் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன உரிமையாளரைத் திருச்சி வரவழைத்து, வாகனத்தைத் திருச்சி 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நீதிபதி பாலாஜி உத்தரவின் பேரில் நேற்று மாலை உரிமையாளரிடம் இருசக்கர வாகனத்தை ஒப்படைத்தனர். வாகன உரிமையாளர் ராஜேஷ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து தனது இருசக்கர வாகனத்தைப் பெற்றுச் சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்