வலுக்கும் வடகிழக்கு பருவமழை; தலைநகரில் அரங்கேறும் அடுத்தடுத்த விபத்துகள்

Intensity of Northeast Monsoon; A series of accidents in the city

தமிழகத்தில் வடகிழக்குபருவமழை துவங்கிகடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளது.

இன்னும் ஐந்து நாட்களுக்குபல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கும் நிலையில் சென்னை அடையாற்றில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைஅடுத்த அரக்கோணத்தில் இருக்கக்கூடிய தேசியப் பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் அருண், 15 மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அதேபோல் சென்னையில் உள்ள அடையாற்றில் பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் போதிய அளவிலான மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் பேரிடர் மீட்பு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் ஆங்காங்கு விபத்துகளும் நடந்து வருகிறது. சென்னை, புளியந்தோப்பு பகுதியில் நேற்று காலை வீட்டின் வெளியே தண்ணீர் பிடிக்க வந்த பெண் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை, வியாசர்பாடியில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான தேவேந்திரன் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்விற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கு தேங்கி இருந்த மழைநீரில் மின்சாரக் கம்பி விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாமல் அதை மிதித்துவிட்ட தேவேந்திரன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை, கொரட்டூரில் பக்தவச்சலம் கல்லூரி அருகே நூறு ஆண்டுகளுக்குப் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. மரம் சாயும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. மரம் முறிந்து விழுந்ததில் அங்கு இருந்த இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தது. அதுமட்டுமின்றி மரம் சாயும் போது மின்சார ஒயர்கள் அதில் சிக்கியதால் அவையும் அறுந்து விழுந்தது. மரம் சாய்வதைக் கவனிக்காமல் அப்பகுதி வழியே சென்ற நபர் ஒருவர் மரத்தைக் கடக்கும் பொழுது சாய்ந்தது. நொடிப் பொழுதில் அவர் உயிர் தப்பும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மரம் விழுந்த போது குறைந்த அளவு வாகனங்கள் வந்ததாலும், அப்பகுதியில் மக்கள் இல்லாததாலும் உயிர் சேதம் ஏதும் இன்றி பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

இதே போல் சென்னையில் ஐந்து இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளும் மாநகராட்சி சார்பில் வேகமாக நடைபெற்று வருகிறது.

monsoon rain
இதையும் படியுங்கள்
Subscribe