Skip to main content

'இனி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடு தீவிரம்' - சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

 'Intensity of control in crowded places' - Chennai Corporation announcement!

 

பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என நேற்று (14.07.2021) மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தல் கொடுத்திருந்தது.  இதுதொடர்பாக, மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறைச் செயலாளர் அஜய்பல்லா நேற்று கடிதம் எழுதியிருந்தார். மலைப் பிரதேசங்களில் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் மக்கள் கூடுவது அதிகரித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. சந்தை, சுற்றுலாத்தலம் மற்றும் பொது இடங்களில் கரோனா விதிகளை மக்கள் கடைப்பிடிப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். எப்போதும் போலவே கரோனா பரிசோதனைகள் தொடர வேண்டும். கரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்தப்படாதது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவலைத் தடுக்க தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் மக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை முறையாக அனைவரும் பின்பற்ற வேண்டும். வழிகாட்டுமுறையைப் பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்