/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-6_131.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் நெடுவாசல் மேற்கு பகுதியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் முருகேசன் கடந்த 2021 பிப்ரவரி 23ம் தேதி இரவு கைகாட்டி - பேராவூரணி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாகச் சென்ற டி.என். 55 யூ 6161 எண்ணுள்ள லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடகாடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது விபத்து ஏற்படுத்திய லாரிக்கானகாப்பீடு உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முருகேசன் உறவினர்கள் புதுக்கோட்டை மோட்டார் வாகன விபத்து உரிமை நீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 லட்சம் எங்களுக்கு தரவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளனர். இது சம்பந்தமாக நீதிமன்றம் சம்மந்தப்பட்ட 'கோ டிஜிட் சென்ட்ரல் இன்சூரன்ஸ்' கம்பெனிக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் கோ டிஜிட் சென்ட்ரல் இன்சூரன்ஸ் கம்பெனிசென்னை,தேனாம்பேட்டை அலுவலகத்தில் சட்டம் மற்றும் புலனாய்வுப் பிரிவு மேலாளர் விஜயலெட்சுமி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக வடகாடு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் கடந்த 2021 பிப்ரவரி 23ம் தேதி பேராவூரணி - கைகாட்டி சாலையில் நடந்த விபத்தில் முருகேசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அதனால் விபத்து ஏற்படுத்திய லாரி காப்பீடு செய்துள்ள கோ டிஜிட் நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடு தர கேட்டுள்ளனர். ஆனால் கோப்புகளை ஆய்வு செய்தபோது விபத்து ஏற்படுத்திய டி.என். 55 யூ 6161 லாரி எங்கள் நிறுவனத்தில் காப்பீடு செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆகவே நீதிமன்றத்திற்கு போலி ஆவணங்களை தாக்கல் செய்த லாரி உரிமையாளர் அஞ்சலை மீது எங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியான காப்பீட்டு ஆவணம் தயாரித்து வழங்கியதற்காகவும் எங்கள் நிறுவன பெயர் மற்றும் முத்திரையை தவறாகப் பயன்படுத்தியமைக்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நீண்ட காலமாகவே பல புரோக்கர்கள் வாகனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் இன்சூரன்ஸ் செய்வதாகக் கூறி வாகன உரிமையாளர்களிடம் பணம் பறித்துக் கொண்டு போலி இன்சூரன்ஸ் ஆவணங்களை வழங்கி வருவது இதுபோன்ற விபத்து காலங்களில் கண்டறியப்படுகிறது. ஆகவே இந்த வழக்கின் மூலம் போலி காப்பீடு ஆவணங்கள் தயாரித்தவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் வாகன உரிமையாளர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)