விமான நிலையத்தில் அவமதிப்பு; மயிலாடுதுறை எம்.பி. சுதா பரபரப்பு குற்றச்சாட்டு!

Insults at the airport; Mayiladuthurai MP Suda sensational accusation

சென்னை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி.யும், வழக்கறிஞருமான சுதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயில்களில் உள்ள டோல்கேட் ஆபரேட்டர் மற்றும் அவரது பயிற்சி பெறாதபணியாளர்களால் காட்டப்படும் அடாவடித்தனம் மற்றும் நடத்தை முறைகள் வெட்கக்கேடானது மற்றும் பழமைவாய்ந்த பிற்போக்குத்தனமாகும் ஆகும். சென்னை விமான நிலையத்தில் மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஏற்படும் சிரமங்களையும் துன்புறுத்தலையும் ஊடகங்கள் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் செப்டம்பர் 11 அதிகாலை டெல்லியில் இருந்து திரும்பியபோது, சென்னை-விமான நிலைய டோல்கேட் பணியாளர்களால் இரண்டாவது முறையாகத் தொல்லைக்கு ஆளானேன். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது வசதிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இருந்த போதிலும் செப்டம்பர் 11 ஆம் தேதி அதிகாலை 01.30 மணிக்குச் சென்னை விமான நிலையத்தில் உரிய முறையில் பதிலளிக்காத டோல்கேட் ஆபரேட்டர்கள் ஒரு குழுவினர் என்னை நீண்ட காலமாக தடுத்து வைத்தனர். இது தொடர்பாகக் காரணம் தெரிவிக்க மறுத்து, அடையாள அட்டையைப் பார்க்க மறுத்து, யாரிடமும் பேச மறுத்தனர். வழிப்பறி கொள்ளையர்களைப் போலப் பணம் கேட்டனர். அவர்களின் மேற்பார்வையாளரும் தொலைப்பேசியில் அச்சுறுத்தும் விதமாகவும் அவமரியாதையாகவும் பேசினார்.

வேண்டுமென்றே இத்தகைய துன்புறுத்தலுக்கு நான் உட்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த முறை செய்தது போல் எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்களை விடமாட்டேன். இதை உயர் மட்டத்தில் எடுத்து அனைத்து சென்னை விமான நிலைய பயனாளர்களுக்கும் நீதியைக் கொண்டு வர எண்ணுகிறேன். பார்க்கிங், நுழைவு மற்றும் வெளியேறும் சிக்கல்கள், வேண்டுமென்றே உருவாக்கப்படும் தாமதம், பார்வையாளர்களுக்குச் சுங்க கட்டணம் செலுத்துதல் மற்றும் ஒப்பந்ததாரர் மற்றும் அவரது ஆட்களின் பயிற்சிபெறதா பணியாளர்களின் முறையற்ற நடத்தை ஆகியவை தொடர்பான அனைத்து புகார்கள் குறித்தும் முறையான விசாரணையைக் கோருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவின் இறுதியில் சென்னை விமான நிலையத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தின்அதிகாரப்பூர்வ பக்கத்தையும், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடுவையும் குறிப்பிட்டுள்ளார்.

Mayiladuthurai
இதையும் படியுங்கள்
Subscribe