
சாதி பெயரைக் கூறி இழிவாகப் பேசியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அரசு ஊழியர் ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிவர் ராஜேந்திரன். இவர் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி அமைச்சர் ராஜகண்ணப்பனின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்றுள்ளார். அப்பொழுது அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும், வேறு மாவட்டத்திற்கு மாற்றிவிடுவேன் என மிரட்டியதாகவும் ராஜேந்திரன் புகார் தெரிவித்துள்ளார். அமைச்சரின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், தமிழக முதல்வர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது, ''நீ சேர்மேனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவ... சேர்மன் சொல்வதைத்தான் செய்வ... போன் பண்ணா எடுக்க மாட்ட... எஸ்சி பட்டியலைச் சேர்ந்த உன்ன வைத்திருப்பதே தப்பு... இப்போவே இவன மாத்துங்க... இவன் சரிப்பட்டு வரமாட்டான் என்று ஆவேசமாக பேசுகிறார். அப்படி அவர் பேசும் அளவிற்கு நான் இந்த ப்ளாக்கில் எந்த தவறும் செய்யவில்லை'' எனத் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக பட்டியலினத்தோர் நல ஆணையத்திற்குப் புகாரளிக்க உள்ளதாகவும் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.