“Instruments in use in Indian Meteorological Department are at par with world class” - Chennai Meteorological Department

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisment

அதே சமயம் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சரியாக கணித்து முன்னெச்சரிக்கை தகவல்களை அளிக்கவில்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் விளக்கம்அளிக்கப்பட்டிருக்கிறது. அதில், “சமீபமாக, சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைகோள் வசதிகள், ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பான்கள் உலகத்தரத்திற்கு ஒப்பானவை.

Advertisment

சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக, சென்னை வானிலையை கண்காணிக்க இரண்டு டாப்ளர் ரேடார்களும், தென் தமிழகத்தை கண்காணிக்க மூன்று டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் உள்ளன. இதில் எக்ஸ் பாண்ட் (X band) வகை ரேடார் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும். இந்தியாவில் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை மையத்தில் பணியாற்றுகிறார்கள். உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு மற்றும் முன் எச்சரிக்கைகளை உலகத்தரம் வாய்ந்தது என்று பாராட்டியுள்ளது.

வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ் மற்றும் மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் காரணமாக பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக, சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும், நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது. அத்தகைய தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment