தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகக் கொண்டுவரப்பட்ட செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அ.தி.மு.க ஆட்சி வந்தபின் திட்டமிட்டு முடக்கப்பட்டதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறு ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் செம்மொழி நிறுவனம் பாழ்படுத்தப்பட்டு விட்டது. தமிழகத்தின் உயிரோட்டமாக இருக்கும் தமிழ் மொழி உணர்வை முனை மழுங்கச் செய்து விடலாம் என பா.ஜ.க அரசு கனவிலும் எண்ணவேண்டாம். தமிழ்ச் செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை உடனே மத்திய அரசு கைவிட வேண்டும். அதற்கு முதல்வர் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை தேவை. மைசூரில் உள்ள பி.பி.பிபல்கலைக் கழகத்துடன் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை இணைக்கும்முடிவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். வழக்கம்போல் அமைதி காக்காமல் மத்திய அரசுக்கு முதல்வர் உடனே உரியஅழுத்தம் தர வேண்டும். தமிழ் மொழி மீது பாசம் காட்டுவதைப் போல் பாசாங்கு செய்கிறது மத்திய பாஜக அரசு. தமிழ் வளர்ச்சிக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதமத்திய அரசின் வேடத்தை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் எனக்கூறியுள்ளார்.