
செங்கல்பட்டில் உரிய நேரத்தில் காவலர்கள் பணிக்கு வராததால் காவல் நிலையம் மூடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 16 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். நீதிமன்றத்தில் போக்சோ வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக ஆய்வாளர் ராஜாமணி, அருள்மொழி தேவி இன்று அதிகாலையில் செங்கல்பட்டு மகளிர் காவல் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். 6:00 மணி ஆகியும் சக காவலர்கள் பணிக்கு வராததால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியதற்கான ஆவணங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தை பூட்டிவிட்டு நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு அவசர அவசரமாக காவல் நிலையத்திற்கு வந்த பெண் காவலர்கள் காவல் நிலையம் பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புகார் மனு கொடுக்க வந்தவர்களும் காவல் நிலையத்தின் வெளியே அதிக நேரம் காத்திருந்தனர்.
12 மணிக்கு மேல் காவல் நிலையம் வந்த ஆய்வாளர் சாவியை வீசி எறிந்துவிட்டு காவலர்கள் அனைவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. காவல் நிலைய ஆய்வாளர் காவல் நிலையத்தை பூட்டிச் சென்ற சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.