Inspector speaks support Tollgate for collecting customs duties

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் நடுவது, நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் செடிகள் நட்டு பராமரிப்பது, கிராம சாலை தேசிய நெடுஞ்சாலையில் இணையும் பகுதிகளில் மின் விளக்குகள் அமைப்பது, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால் தனியார் நிறுவனம் முறையான பராமரிப்பு பணிகளை செய்யவில்லை.

Advertisment

இந்நிலையில் ஒப்பந்தத் தொகையை விட கூடுதலான தொகையை தனியார் நிறுவனம் சுங்கச்சாவடி கட்டணம் மூலம் வசூல் செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. தற்போது தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தாலும், மாதத்துக்கு ரூபாய் 11 கோடி சுங்க கட்டணம் மூலம் வசூல் செய்து பராமரிப்பு பணிக்காக வெறும் ரூபாய் 30 லட்சம் மட்டுமே செலவிடுகிறது. இதனால் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தியும் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே மதுரை எலியார்பட்டி டோல்கேட் மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் ஆகிய இரண்டு டோல்கேட்களிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இரு புறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை டோல்கேட் கட்டணம் வசூல் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளெட் ஆகியோர் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறிப்பிட்ட இரு டோல்கேட்களிலும் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்தனர். நீதிமன்ற உத்தரவை மீறி சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது. தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் விவரங்கள் குறித்து அறிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்குத் தள்ளி வைத்தனர்.

Inspector speaks support Tollgate for collecting customs duties

இந்த நிலையில் இன்று புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் சுங்க கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுங்க கட்டணம் உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதும் உடனடியாக கட்டணத்தை உயர்த்தி பணத்தை வசூலிக்கும் டோல்கேட் நிர்வாகம்,

Advertisment

சுங்க கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் அதை மதிக்காமல் தொடர்ந்து கட்டணம் வசூலிப்பது விதிமீறல் என தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உயர்நீதிமன்ற உத்தரவு நகல் எங்களிடம் வராததால் நீதிமன்ற உத்தரவு வரும் வரை நாங்கள் சுங்க கட்டணம் வசூலிப்போம் என டோல்கேட் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் தூத்துக்குடி துறைமுகம் நோக்கி வந்த கனரக லாரிகள் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே ஆங்காங்கே நிறுத்தி வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் வழக்கறிஞர்கள், லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Inspector speaks support Tollgate for collecting customs duties

அப்போது அங்கு வந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ‘முதல்ல கோர்ட் ஆர்டரை எனக்கு காண்பிங்க..’ என கேட்டதால் போலீசுக்கும் போராட்ட குழுவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி