சென்னையில் ரயில்வே பணியாளர்களுக்கு என்று பிரத்தியேக விஜிலென்ஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் உள்ள அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது புகார் வரும்பொழுதோ குறிப்பிட்ட ரயில்வே அலுவலகத்துக்குச் சென்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகையில் கடந்த சில மாதங்களாக பொன்மலை பணிமனையில் பணியாளர்கள் சிலர் பணிக்கு வந்துவிட்டு, வேலையில் ஈடுபடாமல் சங்க வேலைகளில் அதிகம் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதாக சென்னையில் உள்ள ரயில்வே விஜிலன்ஸ் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன.

Advertisment

inspection in ponmalai railways

இதைத்தொடர்ந்து தீடீர் என காலையில் ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகள் 5 பேர் பொன்மலை ஆர்மர்கேட் பகுதியில் நின்று கொண்டு வருகை பதிவேடு ஆய்வு செய்தனர். அங்கு வந்த பதிவேட்டின்படி பணிமனைக்குள் பணியாளர்கள் வேலை செய்கிறார்களா என்று ஆய்வு செய்தனர். சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேல் இந்த ஆய்வு நடந்தது . தகவல் அறிந்த சில ரயில்வே ஊழியர்கள் அவசர அவசரமாக பணிக்குச் சென்று பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பணிமனையில் உள்ள முதன்மை பணிமனை மேலாளர் ஷா அலுவலகத்திற்கு விஜிலென்ஸ் அதிகாரிகள் சென்று நடந்த விபரங்களை தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். அன்றைக்கு கையெழுத்து போட்டுவிட்டு வெளியே சென்ற ரயில்வே ஊழியர்கள் என்ன நடக்குமோ என்கிற பயத்தில் இருக்கிறார்கள். இதே போன்று அடிக்கடி தொடர்ந்து சோதனை நடந்தால் நல்லது என்கிற குரல் ரயில்வே தொழிலாளர்கள் பக்கம் கேட்க துவங்கியுள்ளது.

Advertisment