
விக்ராந்த் போர்க்கப்பலை சென்னையில் நிறுத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது.
20000 கோடி ரூபாய் செலவில் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியின் போது கடற்படைக்கு புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
உள்நாட்டிலேயே போர்க்கப்பல்களை உருவாக்கும் நாடுகளோடு இந்தியாவும் இணைந்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு எத்தகைய இன்னல்கள் வந்தாலும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய கடல் எல்லைக்கு பாதுகாப்பாக செயல்படப்போகும் விக்ராந்த் போர்க்கப்பல் தனது பணியை தொடங்கியுள்ளது. முதலில் விக்ராந்த் போர்க்கப்பலை விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தலைமை பகுதியில் நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்கு பின் விக்ராந்த் போர்க்கப்பலை சென்னையில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பலை வெற்றிகரமாக பழுது பார்த்ததன் மூலம் அமெரிக்கா சார்லஸ் டியூ என்ற கப்பலை பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.