'Innocent people do not get protection in the Dravidian model?'-Anbumani condemned

சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் தனுஷ் (வயது 24). இவர் பல்வேறு குத்துச் சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் பெற்றுள்ளார். இந்நிலையில் தனுஷ் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மோகன், செந்தில், டேவிட், விஷால் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் 'திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பே கிடையாதா?' என பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த குத்துச்சண்டை வீரர் ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு மிக அருகில் நடந்துள்ள இந்த படுகொலை தான் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர் கலைந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

Advertisment

ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான தனுஷ் குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார். அதே பகுதியில் மோகன் என்பவர் கஞ்சா, போதை ஊசிகள், போதை மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்து வந்திருக்கிறார். அதற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அவரை மோகனும் இன்னொருவரும் சேர்ந்து படுகொலை செய்திருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்கு காரணம் காவல்துறையின் அலட்சியம் தான்.

'Innocent people do not get protection in the Dravidian model?'-Anbumani condemned

கொலை நடந்த ஐஸ் ஹவுஸ் பகுதி காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு மிக அருகில் உள்ளது. அந்தப் பகுதியிலேயே நீண்ட காலமாக கஞ்சா விற்பனை நடந்து வந்திருக்கிறது. காவல்துறை உண்மையாகவே செயல்திறன் மிக்கதாக இருந்திருந்தால் கஞ்சா விற்பனையை தடுத்தி நிறுத்தியிருப்பதுடன், அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும். அதை செய்திருந்தால் தனுஷ் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார். தனுஷுக்கும், மோகனுக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வந்த நிலையில், தனுஷை மோகன் கும்பல் படுகொலை செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை உளவுத்துறை மூலம் தமிழக அரசு கண்டுபிடித்து தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதில் தமிழக அரசு படுதோல்வியடைந்து விட்டது.

Advertisment

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தான் காரணமாக இருக்கிறது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாமக பலமுறை வலியுறுத்தினாலும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால், அப்பாவி மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனில் அரசுக்கும், காவல் துறைக்கும் ஓரளவாவது அக்கறை இருந்தால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.