Skip to main content

விதிமீறல் விபரீதம்! சிவகாசியில் ஒரே நாளில் இரு விபத்துக்கள்! பட்டாசுத் தொழிலாளர்கள் நால்வர் பலி!

Published on 06/04/2018 | Edited on 06/04/2018
thooki

 

‘பிரிக்க முடியாதது எதுவோ?’ என்று சிவகாசியில் கேட்டால், பட்டாசு ஆலைகளும் விபத்துக்களும் என்றே பதில் வரும். பட்டாசு விபத்துக்களால் உயிரிழப்புக்கள் ஏற்படுவது சர்வசாதாரணமாகிவிட்டது. இன்று ஒரே நாளில் இருவேறு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு,  தலா இருவர் வீதம் நால்வர் பலியாகியிருக்கின்றனர். 100 சதவீத காயங்களுடன் இருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர். நீண்ட நேரம் போராடி, தீயணைப்புத் துறையினர் பட்டாசு ஆலைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். 

 

சிவகாசி அருகிலுள்ள வெம்பக்கோட்டை – ராமுத்தேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு, சேகர், ரவி ஆகிய இருவர் உயிரிழந்தனர். அதேபோல, காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு, சுப்பிரமணியன், தெய்வானை ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். மேலும், ரவிகுமார், செந்தில்குமார், பழனிச்சாமி, முத்துமாரி, மகேஷ் ஆகிய 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

vc

 

தூக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டும், விதி மீறலாக மரத்தடியில் பட்டாசு உற்பத்தி செய்ததாலும், மேற்கண்ட விபத்துக்கள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

 

பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் விநாயகமூர்த்தி “விதிமீறலாக பட்டாசு ஆலைகளைக் குத்தகைக்கு விடுகின்றனர். விதிமீறல்கள் நடக்கின்றனவா என்று கண்காணிக்க வேண்டிய அரசுத்துறையினரோ, லஞ்சம் வாங்கிக்கொண்டு, எதையும் கண்டுகொள்வதில்லை. அரசு அலுவலர்களின் சுயநலமும் அலட்சியமும், விதிகளை மீறும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலரின் பேராசையும், விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன. இத்தகைய தவறுகளால்,  அப்பாவித் தொழிலாளர்களின் உயிர் பறிபோகிறது.” என்றார் வேதனையோடு.   

 

பட்டாசு ஆலை விபத்துக்கள் தொடர்வதும், உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் தொடர்கதை ஆகிவிட்டது. ஆனாலும், லஞ்சம் வாங்கும்  அரசுத்துறையினருக்கோ, பணத்தாசை கொண்ட  பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கோ, யாருக்கும் வெட்கமில்லை!


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.