
சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவர் வந்திருக்கிறார். அப்பொழுது அவருடைய தகவல்களை ஏ.டி.எம். இயந்திரத்தில் பதிவு செய்த பிறகு பணம் வராமல் இருந்துள்ளது. இது தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் அளித்துள்ளார். அதோடு இது குறித்து மும்பையில் உள்ள வங்கியின் தலைமையகத்திற்கும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தின் பொறியாளர் நரேன்குமாருக்கு மும்பையிலிருந்து இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏ.டி.எம். இயந்திரத்தைச் சரி செய்வதற்காக அங்குச் சென்று பார்த்தனர்.
அப்போது பணம் வெளியே வரக்கூடிய இடத்தில் கருப்பு கலர் அட்டையை வைத்து ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருந்து தெரியவந்தது. இது குறித்து திருவான்மியூர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மற்றொரு புறம் இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் தொழில்நுட்ப பிரிவு பணியாளர்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஏ.டி.எம். மையத்திற்கு வந்த இருவர் கருப்பு நிறத்தில் உள்ள அட்டையை ஏ.டி.எம். இயந்திரத்தினுள் பொருத்துவது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகியிருந்தது. இதன் மூலம் ஏ.டி.எம். இயந்திரத்தில் கோளாறை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
அதாவது போலி சாவி மூலமாக ஏ.டி.எம். இயந்திரத்தைத் திறந்து அதன் உள்ளே கருப்பு அட்டையை வைத்துள்ளனர். இதன் மூலம் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுத்தாலும் வெளியே வராதபடி தடை ஏற்படுத்தப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் (வயது 26), பிரஜத் பாங் (வயது 30) மற்றும் ஸ்மித் யாதவ் (வயது 33) உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை ரகசிய இடத்தில் வைத்து திருவான்மியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், உத்திர பிரதேசத்தில் இருந்து வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மட்டும் சென்னைக்கு வந்துள்ளனர். அதோடு காவலாளிகள் இல்லாத எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்தைக் குறி வைத்து போலி சாவியை வைத்து ஏ.டி.எம். இயந்திரத்தின் கதவை திறந்து பணம் வெளியே வரக்கூடிய இடத்தில் பணம் வராத அளவிற்கு ஸ்டிக்கரை ஒட்டி வைத்து விடுவர். இதனால் ஏ.டி.எம். இயந்திரத்தின் கோளாறு என்று வாடிக்கையாளர்கள் நினைத்துக் கொண்டு செல்லக்கூடிய நிலையை உருவாக்கி விடுகின்றனர்.

அதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து அங்குச் சென்று ஏ.டி.எம். உள்ளே பணத்தை எடுத்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளனர். இந்த திட்டத்தின் படி இவர்கள் 2 நாட்களில் ஒரு லட்சம் ரூபாய் வரை கொள்ளை அடித்துவிட்டு ரயில் மூலம் சொந்த ஊருக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோன்று சென்னையின் புறநகர்ப் பகுதிகளும் கைவரிசை காட்டி இருப்பதும், கடந்த 3 மாதங்களாகத் தொடர்ந்து இதே போன்ற செயலில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.