
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே இன்று (20-05-25) காலை பாஸ்ட்டாக் இல்லாததால், ஓட்டுநர் கமலக்கண்ணன் என்பவர் தனது லாரியை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தியிருந்தார். கமலக்கண்ணன் லாரியின் கீழே இறங்கி செல்போனில் வந்த போது, சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருந்த லாரியை மர்மநபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர் கமலக்கண்ணன், உடனடியாக சுங்கசாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவலைத் தெரிவித்தார். இந்த தகவல் குறித்து மற்ற போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
மகேந்திரா சிட்டி சிக்னல் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் முருகன், லாரியின் மீது ஏறி லாரியை நிறுத்த முயற்சித்தார். தொடர்ந்து 10 கி.மீ தூரம் லாரியில் தொங்கியபடி சென்ற காவலர் முருகன், மற்ற போலீசாரின் உதவியுடன் கடத்தி செல்லப்பட்ட லாரியை நிறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, லாரியை கடத்திச் சென்ற நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரியை கடத்திச் சென்ற நபர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றித் திரிந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில் சுபாஷ் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியானது.
பரனூர் சுங்கச்சாவடி அருகே உள்ள கோயில் ஒன்றில் உள்ளே புகுந்து கோயில் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை சுபாஷ் சூரையாடியுள்ளார். மேலும், நேற்று மாலை செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே தனியாகச் சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து, கடந்த 17ஆம் தேதி காலை ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள டீக்கடைக்குச் சென்று மோர் குடித்துவிட்டு இலங்கை நாணயத்தை சுபாஷ் கடையில் இருந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண், சுபாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, கடையில் இருந்து சூடான பாலை எடுத்து அந்த பெண் மீது ஊற்றி தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக சுபாஷை பின்தொடர்ந்து சென்று அங்கிருக்கக் கூடிய பொது மக்கள், அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சுபாஷை விசாரணை நடத்திய போலீசார், அவரை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.