/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/seeman-pm-art_0.jpg)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக அவர் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கைத் திரும்ப பெற்றுக்கொண்டார். இருப்பினும், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு கடந்த 17ஆம் தேதி (17.02.2025) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை12 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நேற்று சீமான் நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். சம்மனில் குறிப்பிட்டிருந்தபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இருப்பினும் அவர் கட்சிப் பணிக்காகச் சென்றிருப்பதாகக் கூறி அவரது சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதன் காரணமாக இன்று (28.02.2025) காலை 11 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டில் சம்மனை போலீசார் ஒட்டினர். அதில், ‘விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த நபர் ஒருவரால் கிழிக்கப்பட்டது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இது கேவலமான ஒரு நடவடிக்கை. காவல்துறை இந்த வழக்கில் 3 மணி நேரம் விசாரித்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். திருப்பியும் சம்மன் அனுப்பி அதே வாக்குமூலத்தைத் தான் பதிவு செய்ய உள்ளனர். காவல்துறையினர் திரும்ப என்னை அசிங்கப்படுத்த இதனைச் செய்கின்றனர். தர்மபுரியில் கட்சிப் பணி உள்ளதால் ஆஜராக முடியாது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தர்மபுரியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்பு சீமான் சேலம் செல்கிறார். அதன் பின்னர் மாலை 3 மணி அளவில் சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை திரும்புகிறார். அங்கிருந்து அவரது இல்லத்திற்குச் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்க உள்ளார். அதன் பின்னர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று (28.02.2025) மாலை 6 மணிக்கு ஆஜராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)