“ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் எப்போது? - வெளியான பரபரப்பு தகவல்!

information released When will the details of Gnanasekaran sentence be announced

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) அப்பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறுநாளே கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி இந்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்தன. அதன் பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன் வைத்தனர். இவ்வாறு இருதரப்பின் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனையொட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரன் அங்கிருந்து மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி ராஜலட்சுமி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, “அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் ஞானசேகரன், “எனக்கு அம்மா மட்டுமே உள்ளார். அவருக்கு வயதாகிவிட்டது. எனக்குத் திருமணமாகி 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. எனவே குடும்பச்சூழலைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். என்னுடைய தொழில் பாதிக்கும் வகையில் வங்கிக் கணக்குகள் எல்லாம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை நீக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று (28.05.2025) இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவர் மீதான 11 பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது ” என நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.

மேலும்,“தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவு உள்ளதா?” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டபோது ஞானசேகரன் நீதிமன்றத்தில் கதறி அழுதார். இந்நிலையில் தண்டனை விவரம் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜூன் 2ஆம் தேதி வரை ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த வழக்கில் 5 மாதங்களில் அனைத்து விசாரணைகளையும் முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Anna University Chennai court judgement
இதையும் படியுங்கள்
Subscribe