information released in the investigation actress arrested

சென்னையை அடுத்துள்ள கோவிலம்பாக்கம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் என்கிற சித்ரா. சின்னத்திரை நடிகையான இவர் டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரில் நடித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisment

இவர் கைது செய்யப்பட்டபோது 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர் சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்குப் போதைப்பொருள் சப்ளை செய்தது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சின்னத்திரை நடிகை ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இந்நிலையில் போலீசார் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வாட்ஸ்அப் குழு மூலம் போதைப் பொருட்களை வாங்கி சக நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மொத்தமாக வாங்கி விற்றால் போலீசாரிடம் மாட்டிக் கொள்வோம் என்பதால் கிராம் கணக்கில் மட்டும் வாங்கி விற்பனை செய்ததாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து சித்ராவை போலீசார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ளார்.