தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் கடந்த 21ஆம் தேதி (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. 

இதனால் முதல்வர் மு.க. ஸ்டாலினின் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர், அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு முக்கிய கோப்புகளைப் பார்வையிட்டு ஒப்புதல் அளித்தும் வருகிறார். இத்தகைய சூழலில் தான் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் 7வது நாளாக இன்று (27.07.2025) சிகிச்சை பெற்று வருகிறார். 

இதற்கிடையே அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். அதனை தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்குவார்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கைகள் அடங்கிய விவரம் வெளியாகியுள்ளது. 

அதில், “சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவாக விடுவிக்கவும் நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. சேலம் உருக்காலையின் மிகை நிலங்களை பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.