Advertisment

விடுதியில் தீ விபத்து சம்பவம்; போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

Information in the police investigation on Fire incident in hostel

Advertisment

மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள, கட்ராபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் இன்று (12-09-24) அதிகாலை 4 மணியளவில் இந்த விடுதியில் இருந்த பிரிட்ஜ் திடீரென்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக, கடுமையான கரும்புகை ஏற்பட்ட நிலையில், அருகில் இருக்கக்கூடியவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விடுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தி அந்த விடுதியில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மீட்டனர்.

இந்த விடுதியில் ஏற்பட்டுள்ள தீயினால், கரும்புகை உருவானதில் மூச்சுத்திணறலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், பிரிட்ஜ் வெடிக்கும் போது, அதன் அருகில் இருந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரையும் பலத்த காயங்களுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவித்திருந்தனர். பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர் இன்பாவை மதுரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 100 ஆண்டுகள் பழமையாக கட்டடத்தில் இயங்கி வந்த விசாகா பெண்கள் விடுதி, மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறவில்லை. கட்டடம் சேதமடைந்து இருப்பதால் விடுதியை காலி செய்யுமாறு இடத்தின் உரிமையாளர் கூறியும், வெளியேற மறுத்துள்ளார். மருத்துவமனை நடத்த அனுமதி பெற்றுவிட்டு மகளிர் விடுதியை நடத்தி வந்ததால், விடுதியின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் கட்டடத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார் என்று கூறப்படுகிறது.

Advertisment

இதற்கிடையில், 2023ஆம் ஆண்டே விடுதியை இடித்து அப்புறப்படுத்த மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. ஆனால், விடுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விடுதி இடிக்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில், விடுதியில் ஏற்பட்டுள்ள விபத்து குறித்து நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று அனுமதி பெற்று விடுதியை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe