Information given by the student through the cell phone ... Relatives and the public together

Advertisment

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு இருபத்து ஏழாம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டுவருகிறது. நேற்று முன்தினம் (09.12.2021) இரவு வழக்கம் போல் அந்தப் பேருந்து விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் நோக்கி புறப்பட்டுச் சென்றது. இந்தப் பஸ்சை இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் ஓட்டிச் சென்றார். பஸ்சில் குடுமியான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன், கண்டக்டராக இயங்கினார்.

இந்நிலையில், கோனூர் என்ற கிராமத்துக்கு முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில், பஸ்ஸில் இருந்த அதிகமான பயணிகள் இறங்கிக் கொண்டனர். கோனூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மட்டும் பஸ்ஸில் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த அவர், அந்தப் பஸ்ஸில் தனது ஊருக்குச் செல்வதற்குப் பயணித்துள்ளார். மாணவி மட்டும் பஸ்சில் தனியாக இருப்பதைக் கவனித்த கண்டக்டர் அவரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவி இறங்க வேண்டிய கோனூர் பேருந்து நிறுத்தம் வந்ததும் மாணவி எழுந்து பஸ்சை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

அதைப் பயன்படுத்திக்கொண்ட கண்டக்டர் சிலம்பரசன், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது. உடனே மாணவி அலறிக் கூச்சல் போட்டுக் கத்தியுள்ளார். அந்த ஆபத்தான சூழ்நிலையிலும் தனது உறவினர்களுக்கு செல்ஃபோன் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். தகவல் கிடைத்த அவரது உறவினர்கள் கோனூர் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனங்களில் திரண்டு வேகமாக வந்து பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். பின்னர் பேருந்தில் ஏறி நடந்த சம்பவங்களை விசாரித்தபோது மாணவி கதறி அழுதபடி நடத்துனரின்பாலியல் அத்துமீறல் குறித்து கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும் ஊர் மக்களும் நடத்துனர் சிலம்பரசனுக்கு தர்ம அடி கொடுத்து அவரையும் டிரைவர் அன்புச்செல்வன் ஆகிய இருவரையும் காணை காவல் நிலையம் கொண்டு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisment

தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார், டிரைவர், கண்டக்டர் இருவரிடமும் விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் நடத்துநர் சிலம்பரசன், இதற்கு உடந்தையாக இருந்த டிரைவர் அன்புச்செல்வன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 2012ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற மாணவிக்கு இதேபோன்று பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்முறை செய்தது போல விழுப்புரம் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பஸ் கண்டக்டர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்ட மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.