“Inflation under control in Tamil Nadu” - Finance Secretary

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Advertisment

அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு ‘காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்’ என்ற திருக்குறளைக் கூறி தனது பட்ஜெட் உரையைத் தொடங்கி அதற்கான விளக்கத்தையும் தெரிவித்தார். அதில் ‘குடிமக்கள் எளிதில் அணுகக்கூடியவராகவும், கடுமையான சொற்களை கூறாது ஆட்சி புரிந்து வரும் அரசனினை உலகமே போற்றும். அதேபோல் கடைக்கோடி மக்களும் எளிதில் அணுகக்கூடியவராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டுக்கு பெருமை’ எனத் தெரிவித்தார். காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு 2 மணி நேரம் 7 நிமிடங்கள் வாசித்து நிறைவு செய்தார்.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தலைமையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பட்ஜெட் குறித்து உதயச்சந்திரன் விளக்கமளித்தார். அதில், “தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது. மத்திய அரசின் நிதிப் பகிர்வு, மானியம் குறைந்து கொண்டே வருகிறது. 10வது நிதிக்குழுவின் போது 6.64% ஆக இருந்த நிதிப்பகிர்வு, 15வது நிதிக்குழுவில் 4.08% ஆக குறைந்துள்ளது. அதே சமயம் மாநில அரசின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் 2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44% ஆக இருக்கும். மாநில சொந்த வரி வருவாய் ரூ. 1.95 லட்சம் கோடி ஆகும். மாநில வரியல்லா வருவாய் ரூ. 30 ஆயிரத்து 728 கோடி ஆகும். மத்திய அரசின் மானியம் ரூ. 23 ஆயிரத்து 354 கோடி ஆகும். மத்திய வரிகளின் பங்கீடு ரூ. 49 ஆயிரத்து 755 கோடி என மொத்தம்ரூ. 2.99 லட்சம் கோடி ஆகும்” எனத் தெரிவித்தார்.