
தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரம், விளாத்திகுளம், வேம்பார் ஆகிய பகுதிகள் மானாவாரி விளைச்சலைக் கொண்ட பூமி. வானம் பார்த்துத்தான் காடுகளில் மானாவரிப் பயிரிடுவது நடைமுறை. உளுந்து பாசிப்பயிறு, பெரும்பாலான பகுதிகளில் மக்காச் சோளம் போன்றவையே அப்பகுதிகளின் விளைபயிர்.
இங்கு பயிர்களுக்கு அடுத்தபடியான தொழில், ஆடு வளர்ப்பு. இவற்றில், செம்மறியாடுகள் வளர்ப்பு மிகுதியானவை. குறிப்பாக விளாத்திகுளம் ஒட்டிய வவ்வால்தொத்திப் பகுதியைச் சேர்ந்த முருகன், கண்ணன், ஆறுமுகம், காளிமுத்து, பரமசிவம் இவர்கள் ஐவரும் 500க்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை வளர்த்து வருபவர்கள். அவைகளின் மூலம் கிடை போட்டு வருமானம் பார்ப்பவர்கள். நேற்று முன்தினம் இவர்கள் தங்களின் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டார்கள், அவைகள் மக்காச் சோளப் பகுதியில் மேய்ந்துவிட்டுத் திரும்பியபோது. அவற்றுக்கு மாலையில் தண்ணீர் வைத்து விட்டுக் கொட்டடியில் அடைத்துள்ளனர். பாதுகாப்பிற்காக அவர்கள் அங்கேயே படுத்துக் கொண்டனர்.
நேற்று காலை, வழக்கம் போன்று மேய்ச்சலுக்காகக் கொட்டடியை திறந்தவர்கள் அதிர்ந்து விட்டனர். அட்டைக்கப்பட்டு வைத்திருந்த ஆடுகள் கூட்டம் கூட்டமாகச் செத்து விழுந்திருக்கின்றன. சில ஆடுகள் அரை மயக்கத்தில் இருந்துள்ளன.
சுமார் 156 ஆடுகள் மாண்டு போனது கண்டு அழுதிருக்கிறார்கள். தகவலறிந்த கால்நடைத்துறை, தூத்துக்குடி மண்டல இயக்குனர் சம்பத் தலைமையிலான குழுவினர் மற்றும் கால்நடை புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின் அவர்கள், சுமார் 65 ஆடுகளை பரிசோதித்ததில் அவைகள் மக்காச் சோளம் பயிரை அளவுக்கு அதிகமாகத் தின்றதால் அது செரிமானமாகாமல் 'உப்பிசம்' ஏற்பட்டு இறந்தது தெரிய வந்திருக்கிறது. மேலும், வயிறு உப்பல் கோளாறு ஏற்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு உடனடியாக ஜீரணமாவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன.
கால்நடை மண்டல இயக்குனர் சம்பத், “செரிமானக் கோளாறு காரணமாக ஆடுகள் இறந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், அது தவிர்த்து வேறு எதுவும் ஆடுகளின் இறப்பிற்குக் காரணமா என்பதையறிய ஆட்டின் உடற்கூறுகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.
பலியான ஆடுகளின் மதிப்பு ரூ.12 லட்சத்திற்கும் மேல்போகும் என்கிறார்கள் பரிதாப கதியிலிருக்கும் ஆடு வளர்ப்போர். தாங்க முடியாத இந்தத் திடீர் இழப்பிற்கு அரசு உதவ வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.