Indigenous people in tears thanked the Collector for providing electricity

Advertisment

சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் பல ஆண்டுகளாக நாடோடிகளாகவும் அகதிகளாகவும் வாழ்ந்துவந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள். இந்த நாட்டு குடிமக்களுக்குக் கிடைக்கக்கூடிய எந்த ஒரு நலத்திட்டங்களும் கிடைத்ததில்லை. பல்வேறு துன்பங்களுக்கு நடுவே குழந்தைகள், வயதானவர்கள் எனச் சிறு பனை ஓலைக் குடிசையிலேயேகடுங்குளிர், வெயில், மழை என எல்லாக் காலத்திலும்வாழ்ந்துவந்தனர்.

மேலும், அருகில் உள்ள உப்பனாற்றில் மீன்பிடி உபகரனங்களின்றி தங்கள் கைகளை, மூலதனமாகக் கொண்டு சிறு மீன்களைப் பிடித்து அவ்வழியே வரும் வழிப்போக்கர்களிடம் ரூ.50 முதல் அதிகபட்சம் நூறு ரூபாய் வரை விற்றுவந்துள்ளனர். அதில், கிடைக்கும் பணத்தை வைத்து,அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று ரேஷன் அரிசியை விலைகொடுத்து வாங்கி, தன் குழந்தைகளுக்கு உணவளித்துவந்தனர்.

இவர்கள் மருத்துவமனை பக்கம் கூடப் போனதில்லை, இங்குள்ள பெண்கள் பிரசவித்தால் குழந்தைகள், தானே பிறந்து, தானே வளரும். இந்த குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போட்டதில்லை, மேலும், சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்தனர். மயான வசதிகள் இல்லாமல், இறந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதற்குக் கூட வழியில்லாமல் தவித்தனர்.

Advertisment

ஒவ்வொரு நாளும் பாலூட்டும் தாய்மார்கள் உணவின்றி தன் குழந்தைகளுக்குப் பாலூட்ட முடியாத நிலையில் இருந்தனர். கேட்பாரின்றி வாழ்ந்த இந்த மக்களை, அந்தப் பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் பூ.ராசாமி, இவர்களுக்கென்று தனி கிராமத்தை,மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உருவாக்கினார். அதற்கு, 'திருவள்ளுவர் குடியிருப்பு' எனப் பெயரும் வைக்கப்பட்டது. வாழும் 26 குடும்பங்களுக்குத் தனிக் குடில் மற்றும் பல்வேறு உதவிகளைப் பெற்று அமைத்துக் கொடுத்திருக்கிறார். மருத்துவமனை பக்கமும், பள்ளிக்கூடம்பக்கமும் போகாத இந்த மக்களுக்கு, விழிப்புணர்வை ஏற்படுத்தி சிகிச்சைக்காகவும், கல்வி கற்கவும் உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், இந்த மக்களின் பிரச்சனைகளைக் கவனத்தில் கொண்டு,சமீபத்தில் இங்குள்ள குழந்தைகள் 40-க்கும் மேற்பட்டவர்களை அரசு பள்ளியில் சேர்த்து கல்வி கற்க நடவடிக்கை எடுத்தார்.

இவர்கள் வாழும் பகுதியில் மின்சாரம் இல்லாமல் பல ஆண்டுகளாக இருளிலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு மின் இனைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார் ஆட்சியரிம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு 8-க்கும் மேற்பட்ட புதிய மின் கம்பங்கள் குறுகிய காலத்தில் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

Advertisment

cnc

இதனைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி, குடியிருப்புப் பகுதியில் நடைபெற்றது. இதில் சார் ஆட்சியர் மதுபாலன் கலந்துகொண்டு, குழந்தைகளுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கினார். சமூக ஆர்வலர் பூ ராசாமி, சிதம்பரம் கிராமப்புற உதவி மின் பொறியாளர் பாரி, மின்கம்பியாளள் தினேஷ், பேராசியர் பிரவின்குமார்ஆகியோர் கலந்துகொண்டனர். அங்கு வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் முதல்முறையாக மின்சாரவிளக்கு எரிவதைக் கண்டு சார் ஆட்சியருக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வு, அனைவரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த சார் ஆட்சியருக்கு, அப்பகுதியில் உள்ள மக்கள் மலர்தூவி மரியாதை செய்து வரவேற்றனர்.