Advertisment

"உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை உடனே மீட்க வேண்டும்"- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

publive-image

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (15/02/2022) வெளியிட்டிருக்கும்அறிக்கையில், "கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷ்யா எந்த நிமிடமும் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் இரு நாட்டு எல்லையில், குறிப்பாக உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் நாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்று வரும் நிலையில், அவர்களின் நிலை என்னவாகும் என்ற கவலை அதிகரித்துள்ளது.

Advertisment

ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா சோசலிசக் குடியரசின் அங்கமாக ஒரு காலத்தில் இருந்து, இப்போது தனித்தனி நாடுகளாக உள்ள ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி வந்தாலும் கூட, உக்ரைனைச் சுற்றியுள்ள தமது எல்லையிலும், உக்ரைன் நாட்டில் ஆக்கிரமித்து வைத்துள்ள கிரிமியா பிராந்தியத்திலும், முப்படைகளையும் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் கூடுதலான படைகளையும், போர் விமானங்களையும் ரஷ்யா நிறுத்தி வைத்திருக்கிறது. தங்கள் நாட்டின் மீது ரஷ்யா நாளை போர் தொடுக்கக்கூடும் என்று உக்ரைன் அதிபர் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், எந்த நேரமும் போர் வெடிக்கும் ஆபத்து உள்ளது.

Advertisment

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட இருபதுக்கும் கூடுதலான நாடுகள், உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி கேட்டுக் கொண்டிருக்கின்றன. உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இன்று தான் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது சரியான வழிகாட்டுதல் தான் என்றாலும், அங்குள்ள இந்தியர்கள் எவ்வாறு வெளியேறுவர் என்பது தெரியவில்லை. குறிப்பாக உக்ரைன்- ரஷ்யா பதற்றம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியர்கள் தாயகம் திரும்ப இது தடையாக உள்ளது.

உக்ரைன் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். அவர்கள் தவிர வணிகம் செய்வது உள்ளிட்ட காரணங்களுக்காக சுமார் 5000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். உக்ரைனில் வாழும் சுமார் 25 ஆயிரம் இந்தியர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பான்மையினர் மாணவர்கள் என்பதாலும் அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் உக்ரைன் நாட்டுக்கு முற்றிலும் புதியவர்கள் என்பதால், அவர்களுக்கு அடுத்து என்ன செய்வது? என்பது தெரியவில்லை.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் அந்த இரு நாடுகளுடன் மட்டும் நின்று விட்டால், அதிகபட்சம் 72 மணி நேரத்திற்குள் போர் முடிவடைந்து விடும். ஆனால், நேட்டோ நாடுகள் (North Atlantic Treaty Organization - NATO)) உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டால், இந்தப் போர் வாரக்கணக்கில் நீடிக்கும் ஆபத்து இருப்பதாக அஞ்சப்படுகிறது. அத்தகைய நிலை ஏற்பட்டால் உக்ரைனுக்கும், அந்த நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் மிக அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதைக் கருத்தில் கொண்டு அங்குள்ள இந்தியர்கள் அனைவரையும் வெளியேற்றுவது தான் சரியான செயலாக இருக்கும்.

கடந்த 2014- ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிரிமியா பகுதியைக் கைப்பற்றிய போது, அங்கு தவித்த 1000 இந்தியர்களை மத்திய அரசு தொடர்வண்டிகள் மூலம் உக்ரைன் தலைநகர் கியேவுக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், இப்போது கியேவ் நகரமே தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதால், இந்தியர்கள் அனைவரையும் உக்ரைனிலிருந்து வெளியேற்றுவதே சரியாக இருக்கும்.

எனவே, உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அவர்களாகவே அந்த நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுரை வழங்குவதுடன் நின்று விடாமல், இந்திய அரசே அவர்களை மீட்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் லிபியா மற்றும் ஆப்கானிஸ்தாலிருந்து இந்தியர்களை மீட்டது போல உக்ரைனில் உள்ள இந்தியர்களையும் இந்திய விமானப்படை விமானங்களை அனுப்பி மீட்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Ukraine Ramadoss pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe