



சென்னையில் இன்று (25.08.2021) இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் சில முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடைபெற்றது. அவை, “கரோனா காரணத்தால் மாணவர்கள் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது. அதேபோல் பல ஆய்வுக் குழுக்கள் நடத்திய ஆய்வில், மாணவர்கள் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
மேலும், மாணவர்களின் இடைநிற்றலை தடுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலும் அதிக கட்டணக் கொள்ளையில் ஈடுபடக்கூடிய பள்ளி, கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். பின்பலம் உள்ள நபர்களை உயர்கல்வி நிறுவனங்களில் நியமிப்பதைத் தடுப்பதோடு, அது சார்ந்த நிகழ்ச்சிகளையும் அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
இவ்வாறான பல முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. அதேபோல் சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் விக்னேஷ், தலைவர் மிருதுளா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாரதி, தலைவர் ஆனந்த், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் வசந்த், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.