
நாகரிகம் தோன்றுவதற்கு முன்பு ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதற்கு மனிதர்கள் கால்நடையாக சென்றனர். பிறகு விலங்குகளை(மாடு, குதிரைகள்) பழக்கி பயணம் செய்தனர். பிறகு மரத்தினால் செய்யப்பட்ட வண்டிகளை தயார் செய்து அதன்மூலம் பயணம் மேற்கொண்டனர். பிறகு நீர்வழி பயணத்தில் தெப்பம், (மிதவை) பரிசல் படகு, கப்பல், என வளர்ச்சியடைந்தது. அதேபோல் தரைவழி மார்க்கத்திற்கு மாடுகள், குதிரைகள் பூட்டிய கூட்டுவண்டி, சாரட்டுவண்டி, பிறகு சைக்கிள், பைக், பிறகு நான்கு சக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள், விமானம் என வளர்ச்சியடைந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவை எல்லாவற்றையும் விட மக்கள் குடும்பமாக குழுக்களாக சேர்ந்து செல்வதற்கு உருவாக்கப்பட்டது இரயில்கள். அதிலும் ஆயிரக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் ஏற்றிச்சென்று அவரவர் செல்லவேண்டிய இடங்களுக்கு கொண்டு சேர்த்தது இரயில்.
இந்த ரயில் எப்படி உருவானது?
1853ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் முதல் இந்தியாவில் ரயில் ஓட்டம் தொடங்கப்பட்டது. இது படிப்படியாக வளர்ந்து தற்போது இந்தியா முழுவதும் 63,140 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரயில் பாதை அமைக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களுக்கும் ஆயிரக்கணக்கான இரயில்கள் மக்களுக்கு சேவைசெய்து வருகிறது. இதை நிர்வகிக்கும் ரயில்வே நிர்வாகம் 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பதினாறு லட்சம் ஊழியர்கள் பணிசெய்து வருகிறார்கள்.
இந்திய ரயில்வே மூலம் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள். 35லட்சம் கோடி டன் சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ரயில்வேதுறை இந்திய ரயில்வேதுறை ஆகும். இப்படிப்பட்ட இரயில்கள் உருவாக்கப்பட்டு, ஓட ஆரம்பித்த தொடக்க காலத்தில் அதிசய உருவமாக எண்ணி அதை வேடிக்கை பார்க்க கிராம மக்கள் கால்நடையாகவும் வண்டிகட்டிக் கொண்டு சென்றும் கட்டுசோறு கட்டிகொண்டும்சென்றும் வேடிக்கை பார்த்து அதிசயித்தார்கள்.
திரைப்படம் வந்த காலத்தில் ஒரு திரைப்படத்தில் இரயில் ஒன்று வேகமாக வரும் காட்சிவந்தது. அப்போது கொட்டகையில் அந்த திரைப்படம் பார்த்த மக்கள் கொட்டகையைவிட்டு வெளியே ஓடிவிட்டார்கள். காரணம் அந்த ரயில் தங்கள் மீது வந்து மோதிவிடும் என்று அவர்கள் பயந்தார்கள். இப்படி அறியாமையில் இருந்த மக்கள் முதல் தற்போதுவரை சாதி, மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் ஏற்றிச்செல்கிறது இரயில். இதை உணர்த்தும் வகையில் மறைந்த திரைப்பட நடிகர் என்.எஸ்.கே. அவர்கள் ரயிலே, ரயிலே என ஒரு படத்தில் பாடி பெருமைபடுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்ல, ரயிலையும் மக்களையும் பிரிக்கமுடியாது என்பதை குறிக்கும் வகையில், கிழக்கே போகும் ரயில், ரயில் பயணங்களில், ரயிலுக்கு நேரமாச்சு, என திரைப்படங்களுக்கு பெயர் வைத்தார்கள்.
இப்படி ரயிலுக்கும், மக்களுக்கும் என்றும் இணைபிரியாத பயணநட்பு தொடர்கிறது. அப்படிப்பட்ட நட்பு இப்போது கரோனா என்ற வைரசினால் துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வரலாற்றில் ஏற்கனவே இரண்டு முறை ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்று 1901 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி, இங்கிலாந்து இளவரசி விக்டோரியா மகாராணியின் இறுதிசடங்கின்போது இரயில்கள் நிறுத்தப்பட்டது. அதையடுத்து 1948ம் ஆண்டு சனவரி 31ம் தேதி மகாத்மா காந்தியின் இறுதி சடங்கின்போது ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இப்போது மூன்றாம் முறையாக 2.03.2020 முதல் ஏப்ரல் 14 வரை 24 நாட்கள் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கும் ரயிலுக்குமான நீண்ட நாள் துண்டிப்பு இது. ரயில் மக்கள் சேவையை கடந்தும் மக்களுக்கு சேவைசெய்துள்ளது. எப்படி தெரியுமா? தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலமான 1939 முதல் 1945 வரை ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரால் உருவானது இரண்டாம் உலக போர் அந்த போரின்போது, அதைபற்றிய தகவல்களை மக்கள் தெரிந்து கொள்வதற்கு உதவியது தினசரி பத்திரிகைகள். அந்த பத்திரிகைகள் மாநில தலைநகரங்களில் அச்சிடப்பட்டு அங்கிருந்து ரயில்கள் மூலம் நாடு முழுக்க சென்று சேர்ந்தது.
அந்த செய்திகளை தாங்கிவரும், பத்திரிகை பார்சல்களை பெருவதற்கு ரயில்வே ஸ்டேசன்களில் விடிய, விடிய தூங்காமல் விழித்திருந்து, ரயில் வந்ததும் பத்திரிகை பார்சல்களை எடுத்து சென்று பல்வேறு ஊர்களில் விநியோகம் செய்தார்கள். அதை படித்தே மக்கள் போர் நிலவரம் மற்றும் நாட்டு நிலவரத்தை தெரிந்து கொண்டார்கள். அப்படிப்பட்ட ரயில் சேவையை கண்ணுக்கு புலப்படாத நுண்ணிய கிருமியான கரோனா வைரஸ் நிறுத்திவைத்துள்ளது. இது உலக அதிசயத்திலும், அதிசயமாக உள்ளது.