/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1133.jpg)
ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடற்படை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் சென்ற படகின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து கடற்படை விளக்கம் அளித்தது. அதில், சந்தேகப்படும் படி சென்று கொண்டிருந்தப்படகை நிறுத்தச் சொல்லி தொடர்ந்து எச்சரித்தும் கேட்காமல் விரைந்து சென்றதால் தாக்குதல் நடத்தப்பட்டது. படகு நிற்காமல் சென்றதால் விதிமுறையின் படி துப்பாக்கியால் சுட்டதாகவும், படகு மேற்படி முன்னேறாமல் இருக்க அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3482.jpg)
காயமடைந்த மீனவருக்கு முதலுதவி அளித்து ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் அழைத்துச் சென்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். மேலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம் என்றும் கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான மயிலாடுதுறை மீனவரை அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து விசாரித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், “10 மீனவர்கள் சென்றுள்ளனர். அதில் 3 பேர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள் 6 பேர். மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படை வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் வீரவேல் என்ற மீனவர் காயம் பட்டு தற்போது மதுரைராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தார். மதுரையில் இருக்கும் அமைச்சர் மூர்த்தி மற்றும் எம்.பி சு. வெங்கடேசன் அத்தனை பேரும் அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தோம். அங்கு மீனவரை குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்” எனக் கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_363.jpg)
அதேபோல், கரை திரும்பிய மீனவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நாங்கள் இந்திய எல்லையில் தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது தூரத்திலிருந்து ஒரு கடற்படை படகு வந்தது. அது இந்திய கடற்படையா அல்லது இலங்கை கடற்படையா என தெரியாமல், இலங்கை கடற்படையாக இருக்குமோ என நினைத்து விரித்திருந்த வலையை எடுக்க முயற்சித்தோம். அதற்குள் அந்தப் படகு எங்கள் அருகே வந்தது. அதனால், வலையை கடலிலேயே வெட்டிவிட்டு எங்கள் படகை கரை நோக்கி திருப்பினோம். அப்பொழுதுதான் எங்களை நோக்கி சுட்டனர். 10 முதல் 15 நிமிடங்கள் அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பிறகு நாங்கள் கையை மேலேதூக்கி நின்றோம். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, கீழே மயங்கி விழுந்தார். அதற்குள் அந்த கப்பல்அருகே வந்தது, நாங்கள் இலங்கை கடற்படை என்று நினைத்து ஓடினோம்.பிறகு கடற்படையினர், யாருக்கும் அடிபட்டுள்ளதா என்று கேட்டனர். பிறகு அந்த அடிபட்டு மயங்கி இருந்த இளைஞரை அவர்கள் மீட்டனர். அதுமட்டுமின்றி எங்களின் கைகளைப் பின்புறமாக கட்டிவிட்டு, ஸ்டீல் கம்பியால் கடுமையாக தாக்கினர்” என்று குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை வீரர்கள் மீது தமிழ்நாடு கடலோர காவல் துறையினர்கொலை முயற்சி, பொருட்களை சேதப்படுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Follow Us