indian airforce day flight adventure program incident in chennai marina

இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று (06.10.2024) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன. இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் விமான சாகசங்களைக் கண்டு களித்தனர். மெரினா சாலைகள், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் பேர் வரை இருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சி, லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உலகத்திலேயே அதிக பார்வையாளர்களுடன் நடைபெற்ற சாகச நிகழ்ச்சி என்று உலக சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமான சாகச நிகழ்ச்சியின் போது வெயில் தாக்கம் காரணமாக 230 பேர் மயக்கமடைந்தாகவும், அதோடு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

indian airforce day flight adventure program incident in chennai marina

Advertisment

முன்னதாக வான் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த பார்வையாளர்களில் பலர் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும்சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (வயது 56) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 34) நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. இத்தகைய சூழலில் தான் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ்குமார் (வயது 37) உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வான் சாகசநிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு பைக்கில் திரும்பியபோது ஓமந்தூரார் அரசுமருத்துவமனை அருகே பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர்மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர்ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களின் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.