indian 2 film chennai high court order

Advertisment

இந்தியன் 2 பட விவகாரத்தில், லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல் நடிப்பில் இந்தியன்- 2 திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இயக்குனர் சங்கருக்கு ஏற்கனவே ஷங்கருக்கு 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீத தொகையை வழங்கவும் தயாராக இருப்பதாகவும், கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், முதலில் இந்த படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்ததாகவும், ஆனால், அவரை சமாதானப்படுத்தி, படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் தானே முன் வந்ததாகவும் குறிப்பிடிருந்தார்.

Advertisment

படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தியதாகவும் லைகா மீது புகார் தெரிவித்திருந்தார்.

தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும் எனவும், லைகா சார்பில் படப்பிடிப்புக்கு அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகவும், இதற்கிடையில் நடிகர் கமலுக்கு ஏற்பட்ட மேக் அப் அலர்ஜி, இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை வீண்டித்தது லைகா நிறுவனம் தான் எனவும்,பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தான் பொறுப்பல்ல எனவும், வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்க தயாராக இருப்பதாகவும், வரும் அக்டோபர் மாதத்திற்குள் படத்தை முடித்து கொடுக்க தயார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில், லைகா தரப்பும், இயக்குனர் சங்கர் தரப்பும், தாங்களே சமரசம் செய்து கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியத நிலையில், இரு தரப்பினரும் தங்களுக்குள்ளாக சமரசம் செய்ய முயற்சித்து அந்த முயற்சி தோல்வி அடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வழக்கு இன்று (30/06/2021) மீண்டும் நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என இடைக்கால நிவாரணம் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

அதே சமயம், இந்தியன் 2 பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமனம் செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.