Skip to main content

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு நம்பகமான தோழனாக இந்தியா விளங்கியது - திருமாவளவன்

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
v


மறைந்த பிரதமர் வாஜ்பாய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள இரங்கல்:

’’மூன்று முறை பிரதமராக இருந்தவரும் தலைசிறந்த பாராளுமன்றவாதியுமான வாஜ்பாய் அவர்கள் காலமான செய்தியறிந்து வேதனைப்படுகிறோம். அரசியல் கண்ணியத்தின் அடையாளமாகத் திகழ்ந்த அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

 

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடி கைதானவர்; அவசரநிலை காலத்தில் சிறைப்படுத்தப்பட்டவர், ஜனதா கட்சியின் தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகத் திறம்பட செயல்பட்டவர். 

 

தமிழ் மொழியின் மீது  அளவற்ற பற்றுகொண்ட வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டுக்கு பல வளர்ச்சித் திட்டங்களை வழங்கினார். தங்கநாற்கர சாலை திட்டம் அவர் ஆட்சி காலத்தில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

 

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.வாஜ்பாய் அதை கடுமையாக எதிர்த்தார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான முடிவு என அதை விமர்சித்த அவர் கச்சத்தீவை மீட்பதற்கு அப்போது திமுக உறுப்பினர்களோடு இணைந்து குரல் எழுப்பினார்.

அவர் பிரதமராக இருந்த காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு நம்பகமான தோழனாக இந்தியா விளங்கியது.

 

கடந்த 9 ஆண்டுகளாக உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய் அவர்கள் மத, இன, மொழி வேறுபாடின்றி குடிமக்கள் அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்ற கொள்கை மீது பற்றுள்ளவராகத் திகழ்ந்தார். அவரைப் பிரிந்து வாடும் உறவினர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.’’


 

சார்ந்த செய்திகள்