Skip to main content

'அம்பேத்கர் விரும்பிய ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்'-திருமாவளவன் பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
 'The India alliance must win to protect the democracy Ambedkar wanted' - Thirumavalavan speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளில் அங்குள்ள அவரது திருவுருவ சிலைக்கு கூட்டணி கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழக அரசு வகுத்துள்ள சமத்துவம் குறித்த உறுதிமொழியை அவர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

இதனைத் தொடர்ந்து நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், கருணாகரநல்லூர், அறந்தாங்கி, மாமங்கலம், கொண்ட சமுத்திரம், வடக்கு பாளையம், சோழத்தரம், குமாரக்குடி, கானூர், நாச்சியார் பேட்டை, திருமுட்டம், கள்ளிப்பாடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரித்து பேசிய அவர், 'அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தையும், அவர் விரும்பிய சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். நடப்பது சாதாரண தேர்தல் அல்ல நாட்டையும் நாட்டு மக்களையும் காக்கும் அறப்போர். முதல்வர் ஸ்டாலின், தலைவர் ராகுல் இணைந்து பாரதிய ஜனதா பாசிச அரசு தொடரக்கூடாது வீழ்த்தப்பட வேண்டும் என தேசிய அளவில் அமைக்கப்பட்ட வியூகம் தான் இந்தியா கூட்டணி.  இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் இங்கு  40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். சிதம்பரம் தொகுதி உட்பட 40 தொகுதியிலும் முதல்வர் தான் வேட்பாளர்' என பேசினார்.

விசிக காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, கூட்டணி கட்சியினர் 200-க்கும் மேற்பட்டவர்கள் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.