நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியான பாஜக கூட்டணிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் 'விரைவில் இந்தியா கூட்டணி பட்ஜெட்டை தாக்கல் செய்யும்' எனவும் பதிவிட்டுள்ளார். அதேபோல் 2024 மத்திய பட்ஜெட் குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் 'ஆந்திரா பீகாருக்கு பட்ஜெட்; மற்ற மாநிலங்களுக்கு அல்வா' என விமர்சித்துள்ளார்.