lory

Advertisment

சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஜூலை 20ம் தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தென்மண்டல லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா இன்று (ஜூன் 29, 208) கூறினார்.

தென்மண்டல லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா, சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாடு முழுவதும் சுங்கக் கட்டண வசூலை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதேபோல, லாரிகளுக்கான வருமான வரியை ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியத்தை உடனடியாக குறைக்க வேண்டும். டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்.

Advertisment

இந்த நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்கனவே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். சுமூகமான முடிவுகள் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் ஜூலை 20ம் தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இந்தமுறை வேலைநிறுத்தப் போராட்டம் மிக தீவிரமாக இருக்கும்.

இதன் காரணமாக இந்தியா முழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடாது. வழக்கமான சரக்கு லாரிகளுடன், காஸ், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியமான சரக்குகளைக் கையாளும் லாரிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றன. இதனால் அனைத்துத் துறைமுகங்களும் மூடப்படும். அரசுக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சுங்கச்சாவடிகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக மத்திய அரசு சொல்கிறது. இதற்கு மாறாக லாரி, டாக்சி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ஆண்டுக்கு ஒரே தவணையாக 20 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால், மத்திய அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க தயாராக இல்லை. ஆகையால் சுங்கச்சாவடி கட்டண வசூலை கைவிடும் வரை எங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்.

Advertisment

எனவே, மத்திய அரசு லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு இடம் கொடுக்காமல் எங்களை அழைத்துப் பேச வேண்டும். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். தவறும்பட்சத்தில், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு சண்முகப்பா கூறினார்.

லாரி உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் குமாரசாமி, செயலாளர் தனராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சென்னகேசவன் ஆகியோர் உடனிருந்தனர்.