கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்; அதிகரிக்கும் உயிர்பலி எண்ணிக்கை!

Increasing on Kallakurichi scam incident

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 32ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் என பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு ஒப்படைத்து தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே, கள்ளக்குறிச்சி விஷச்சாரய மரணம் தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (20-06-24) அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் டி.ஜி.பி, மதுவிலக்குத்துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிவாரணம், உயர் சிகிச்சை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

incident kallakurichi
இதையும் படியுங்கள்
Subscribe