Skip to main content

''வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு... கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள்'' - சுனில் அரோரா தகவல் (படங்கள்) 

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரங்கள், கூட்டணி என களத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று (11.02.2021) 2-வது நாளாக சென்னையில் நடத்தியது. 

 

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு சென்னையில் இரண்டாம் நாளாக இன்று காலை 10 மணிக்குத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுடனும், அதனையடுத்து 11 மணிக்குத் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியது.

 

ஆலோசனைக்குப் பிறகு சுனில் அரோரா தலைமையிலான குழு, தேர்தல் ஏற்பாடு பற்றி செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்பொழுது பேசிய சுனில் அரோரா, ''கரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் ஒருமணி நேரம் அதிகரிக்கப்படும். தமிழகத்தில் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படும். இதனால் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி எண்ணிக்கை 68 ஆயிரத்தில் இருந்து 93 ஆயிரமாக அதிகரிக்கும். 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு தொடர்பாக கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

 

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்தது தொடர்பான தகவல்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகும். வாக்குப்பதிவு முடிந்த இரண்டு நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. சுங்க இலாகா அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை எனவும் அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கின்றன'' என்றார். 

 

சார்ந்த செய்திகள்