Skip to main content

ஆவின் பால் விலை அதிகரிப்பு

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

Increase in the price of milk

 

கடந்த மாத இறுதியில் தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திற்கும் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கொள்முதல் விலையை அதிகரித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு இணையம் உத்தரவிட்டுள்ளது.

 

உத்தரவில், “ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 03.11.2022 நாளிட்ட செய்தி குறிப்பினைத் தொடர்ந்து, 05.11.2022 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32-லிருந்து ரூபாய் 35-ஆகவும், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41-லிருந்து ரூபாய் 44-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

 

இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் விற்பனை விலையைப் பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk, நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும். தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46-க்கே புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை (ஆரஞ்சு பாக்கெட்) லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60-ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.

 

இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தைப் பகுதியாக ஈடுசெய்யும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்திற்குப் பின்னரும் ஆவின் நிறைகொழுப்பு பால் (அட்டை), தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 24 குறைவு. சில்லறை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ.10 குறைவு.

 

உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லறை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்ணாடி பாட்டிலில் பால்; சர்வே முடிவைச் சொன்ன ஆவின் நிர்வாகம்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

 'Milk in a glass bottle' - Aa's administration said the survey results

 

சென்னை, கோவையில் ஏழு இடங்களில் ஆவின் பால் கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்டு சோதனை ஓட்டமாக விற்கப்பட்டது. இந்த நிலையில் கண்ணாடி பாட்டிலில் பால் விற்பதை நுகர்வோர் விரும்புகிறார்களா அல்லது இல்லையா என்ற சர்வே முடிவை ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

நெகிழி பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. நெகிழி பொருட்கள் உற்பத்தியாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

கடந்த முறை இந்த வழக்கின் விசாரணையில், முதல் கட்டமாக அரசு நிறுவனமான ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் தான் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக கண்ணாடி பாட்டிலில் பால் அடைக்கப்பட்டு விற்பனை செய்ய ஏன் முயலக்கூடாது. அப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்தால் மக்கள் அதற்கு எவ்வளவு ஆதரவு தருகிறார்கள் என்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்ய ஆவின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். அதன்படி ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த அறிக்கையில், சென்னை மற்றும் கோவையில் ஏழு இடங்களில் கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால் விற்கப்பட்டு சோதனை ஓட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையில் வில்லிவாக்கம், ஹை கோர்ட் காலனி, திருமங்கலம் சாலை, குமாரசாமி நகர், திருநகர், விம்கோ நகர் ஆகிய இடங்களிலும், கோவையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் கண்ணாடி பாட்டிலில் பால் விற்கப்பட்டது. ஆனால் அந்த சர்வே முடிவில் ஐந்து இடங்களில் கண்ணாடி பாட்டிலில் பால் வேண்டாம் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலேயே கொடுங்கள் என கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாட்டிலில் அடைத்து விற்கப்படும் போது விலை அதிகரித்துவிடும். எனவே பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்கப்படும் பாலே தங்களுக்கு போதுமானது எனத் தெரிவித்துள்ளனர். இந்த சர்வே முடிவுகளைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், வழக்கின் விசாரணையை அக்டோபர் ஒன்பதாம் தேதி ஒத்தி வைத்துள்ளது.

 

 

Next Story

“பால் உற்பத்தியைப் பெருக்க புதிய அணுகுமுறைகளை கடைப்பிடித்து வருகிறோம்” - அமைச்சர் மனோ தங்கராஜ்

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

We are adopting new approaches to increase milk production Minister Mano Thangaraj

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வல்லக்குளம் திருமலைரெட்டிபட்டி, வேப்பங்குடி, ஆகிய பகுதிகளில் தொகுப்பு குளிர்விப்பு நிலையம் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு தொகுப்பு குளிர்விப்பு நிலையத்தை துவக்கி வைத்தார். பின்னர் அவர் அந்தந்த பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

 

அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, “பால் உற்பத்தியைப் பெருக்க புதிய அணுகுமுறைகளை கடைப்பிடித்து வருகிறோம். அது என்ன அணுகுமுறை என்றால், விவசாயிகளை மையப்படுத்திய அமைப்பாக இதனை செயல்படுத்தி வருகிறோம். பால் உற்பத்தியாளர்கள் எங்களுக்கு சதையும் ரத்தமும் போல உள்ளனர். பால் உற்பத்தியாளர்களுக்காக இரண்டரை லட்சம் கறவை மாடுகள் வாங்கி அதிக அளவில் பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பின்வரும் காலங்களில் அதிக அளவு பாலின் தேவை இருக்கும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எனது வேண்டுகோளாக வைப்பது, கரூர் மாவட்ட பகுதிகளில் பால் உற்பத்தியாளர் மையம் இல்லாத கிராமங்களில் பால் உற்பத்தியாளர் மையத்தை உருவாக்க நீங்கள் செயல்பட வேண்டும்” என  கேட்டுக் கொண்டார்.

 

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் குளித்தலை மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி இளங்கோவன் மற்றும் ஆவின் அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் என பலர்  கலந்து கொண்டனர்.