Increase in Fishing Prohibition Allowance

கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினைக் களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது.

Advertisment

இத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில், மீனவ குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று, மீனவர்களின் துயரினை போக்கிடும் வகையில் கடந்த 18 ஆம் தேதி இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2024 - 25 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 8 ஆயிரம் ரூபாயாகஉயர்த்தி வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.

Advertisment

இந்நிலையில் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கடந்த 22 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 79 ஆயிரம் கடலோர மீனவகுடும்பங்கள் பயன்பெறுவார்கள் எனத்தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.