சமீப காலங்களாக காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
காவல்துறை குடியிருப்பை காவல்துறை அதிகாரி ஒருவர்காலி செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து காவல் அதிகாரி மாணிக்கவேல் என்பவரின் சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் காவல்துறை உயரதிகாரிகள் அவர்களுக்கு கீழே இயங்கும் பணியாளர்களை முறையாக கட்டுப்படுத்துவது இல்லை. காவல்துறையின் உயரதிகாரிகள் வீடுகளில் இன்னும் ஆடர்லி முறை பயன்படுத்தப்படுகிறது. இதனால் காவல்துறையினர் தங்களுக்கு கீழ் இருப்போர் மீதே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பான தகவல்களும், ஆவணங்களும் பொதுவெளியிலேயே உள்ள நிலையில் தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சமீப காலங்களாக காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்த நீதிமன்றம், குடியிருப்பை காவல்துறை அதிகாரி காலி செய்யாதது குறித்து மேலதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுவழக்கை ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.