
தமிழ்நாட்டில் வருமான வரித்துறையினரின்அதிரடி சோதனைகள் கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கி சுமார் 100 ஆண்டுகளாக உள்ளது. பல கோடி வரவு செலவுடன் சுமார் 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் தலைவராக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரான அ.தி.மு.க நகரச் செயலாளர் ஆதி.மோகனும், மேலாளராக இசக்கியம்மாளும் உள்ளனர்.
இந்த நகர கூட்டுறவு வங்கியில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை, சேலம், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 11 பேர்திடீரென நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த பல வருடங்களாக கூட்டுறவு வங்கியில் வைப்புத்தொகை, பணப் பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்ய வேண்டிய கணக்குகளைச் சரியாக காட்டாததால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் சோதனை முடிவில் எத்தனை லட்ச ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்று தெரியவரும் என்கின்றனர். தொடர்ந்து சோதனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் அதிமுக ஆதிமோகனின் ஆதரவாளர்களான அதிமுகவினர் வங்கி வாசலில் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow Us