வருமானத்தை மறைத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்த மனுவை வேறு நீதிபதிக்கு மாற்றி, நீதிபதி அனிதா சுமந்த் பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த 2015- 16 ஆம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 6.38 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018- ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/karthi chidambaram555.jpg)
சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம், எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து, ஸ்ரீநிதி மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் வருமான வரிதுறை வழக்கு பதிவு செய்த போது எம்.பியாக, கார்த்திக் சிதம்பரம் இல்லை, எனவே, இந்த வழக்கை மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court123_2.jpg)
இந்த வழக்கு இன்று (13.01.2020) நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. வருமான வரிதுறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கார்த்திக் சிதம்பரம் இயக்குநராக இருந்த அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு வழக்கறிஞராக நீங்கள் (நீதிபதி அனிதா சுமந்த்) ஆஜராகி உள்ளதால் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் வரும் 21- ஆம் தேதி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Follow Us