Advertisment

தொடர் கனமழை... அதிகரிக்கும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் சம்பவங்கள்!

Incidents of being swept away by the continuing floods due to the continuous heavy rains

Advertisment

சமீபத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகளிலும், ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. மேலும் ஏரிகள், குளங்கள் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் மிக அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள், வீடுகள், கிராமங்கள், தொழிற்சாலைகள் என எங்கும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தத்தளித்துவருகிறார்கள். இப்படி பெருக்கெடுத்து ஓடும் ஆறு, ஓடை தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் மக்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது.

கடந்த 22ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணிமுத்தாறு வெள்ளத்தில் பெரிய கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 85 வயது பெரியவர் வடிவேல் என்பவர் மணிமுத்தாறு கரைகள் உள்ள விநாயகர் கோவில்படித்துறையில் இறங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக கால் தவறி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தீயணைப்புத் துறையினர் படகு மூலம் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பூதாமூர் அருகே முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார் பெரியவர் வடிவேல். அதேபோல் திட்டக்குடி அருகே உள்ள மேல் ஆதனூர் ஊரைச் சேர்ந்த குகன் என்பவரது மகன் 6 வயது அருணாஸ். இவர் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தார்.

நேற்று முன்தினம் (27.11.2021) அவரது வீட்டின் அருகே ஓடும் ஓடைக்கு சிறுவர்களுடன் வேடிக்கை பார்க்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அருணாஸ் ஓடைக் தண்ணீரில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து, திட்டகுடி தீயணைப்பு நிலைய அலுவலர் வசந்த ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் முதல் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், ஆதனூரிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் ஓடையின் அருகே முட்புதரில் சடலமாக அருணாஸ் மீட்கப்பட்டார். போலீசார் சிறுவன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அதேபோல் கடலூர் அருகே உள்ளது நாராயணபுரம். இந்த ஊர் அருகில் ஓடும் மலட்டாறு பகுதியில் ராசாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது அபினேஷ், 20 வயது பாலாஜி ஆகிய இரண்டு இளைஞர்களும் தங்களது சக நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்றனர்.

Advertisment

அதில் பாலாஜி, அபினேஷ் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்டு சக நண்பர்கள் கூச்சலிட்டனர். தகவலறிந்த கடலூர் தீயணைப்பு வீரர்கள், ரெட்டிச்சாவடி போலீசார் ஆகியோர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களையும் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் தேடியும் இரு இளைஞர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தேடும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. இப்படி தினசரி தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் மக்களின்எண்ணிக்கை அதிகரித்துவருவது வேதனையாக உள்ளது. ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்க்கச் செல்லும் சிறுவர்கள், பெரியவராக இருந்தாலும் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திவருகிறது. பெற்றோர்களும், உறவினர்களும் தங்கள் பிள்ளைகளைக் கவனமுடன் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

floods heavy rain thittakudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe