
திண்டுக்கல் என்ஜிஓ காலனி அருகே இயங்கி வரும் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் நேற்று (12.12.2024) இரவு 9 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீ விபத்தால் மருத்துவமனையில் லிப்ட் பாதியில் நின்றுள்ளது. அதில் சிக்கிய 6 பேர் புகைமூட்டத்தில் மூச்சுத்திணறி மயங்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன், திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மருத்துவமனையில் விதி மீறல் உள்ளதா? என காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னர் தான் தெரிய வரும். இதுவரை நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் எந்தவிதமான விதிமீறல் இருந்ததாகவும் காவல்துறை விசாரணை தெரியவில்லை. கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகள் குறித்தும் விசாரித்துவிட்டு விசாரணைக்கு பிறகு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளதா?. அதன்படி சரியான கட்டமைப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு இந்த அறிக்கையின் படி ஏதாவது விதிமீறல் இருந்தால் நடக்கவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவமனையாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் எலக்ட்ரிக்கல் ஷார்ட் சர்க்யூட் விபத்து என்பது முன்கூட்டியே யாரிடம் சொல்லிவிட்டு வருவதில்லை. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்திக் கொண்டுள்ளார். மருத்துவமனைகளுக்கும் உரிமம் வழங்கப்படும் பொழுது அனைத்து வசதிகளையும் சரிபார்க்கப்பட்ட பின்னர் தான் உரிமம். வழங்கப்படும். எந்த உரிமம் கொடுப்பதாக இருந்தாலும் அனைத்து விதிமுறைகளும் பற்றி ஆராயப்படும். குடியிருப்பு பகுதியில் மருத்துவமனை இருப்பது தவறில்லை. தீ விபத்து ஏற்படும் பொழுது மின்தூக்கிகள் (லிப்ட்) இயக்கக் கூடாது என்பது விதியாக உள்ளது. இங்கு சமூக ஆர்வலர்களோ தன்னார்வலர்கள் லிப்டை இயக்கவில்லை. பதற்றத்தில் நோயாளியுடன் வந்தவர்கள் தான் லிப்டில் இயக்கியுள்ளனர். இதில் இருந்த ஆறு பேர் உயிரிழந்தனர்” எனத் தெரிவித்தார்.