Skip to main content

விருத்தாசலம் அருகே இரு தரப்பு மோதல்!  போலீசார் குவிப்பால் பதற்றம் நீடிப்பு!

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகேயுள்ள தர்மநல்லூர் ஊராட்சியில் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது  ராஜேஸ்வரி சங்கர் மற்றும் அம்சயாள் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இதில் ராஜேஸ்வரி சங்கர் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றார். இதனால் இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

 

incident in viruthachalam

 

கடந்த ஏழாம் தேதியன்று மதுக்கடை அருகே தேர்தலில் தோல்வியடைந்த தரப்பை சேர்ந்த பாண்டியன், செல்வம், ஆனந்த் ஆகிய மூவரும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டு பாரதிதாசனை மூவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அன்றிரவு பாரதிதாசன் மாமனாரான சக்திவேல் அக்கிராமத்தில் உள்ள கடைக்கு சென்றபோது பாண்டியன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று (18.05.2020) மாலை மீண்டும் அவர்களுக்குள் மோதல்  ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினரும் கழி, கட்டைகளால் ஒருவரையொருவர் கும்பலாக கடுமையாக தாக்கி கொண்டனர். இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்ட இச்சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

incident in viruthachalam


இருதரப்பினரும் மோதிக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. அதையடுத்து இதுகுறித்து தகவலறிந்த விருத்தாச்சலம் டிஎஸ்பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் குறித்து கம்மாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள்  எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்