incident in villupuram collector office

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று திங்கள்கிழமை குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண்மணி திடீரென்று மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் ஓடிச்சென்று அந்தப் பெண்ணை தூக்கி உட்கார வைத்தனர்.

Advertisment

இதைக்கண்ட மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உடனடியாக அப்பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சையில் அவர் விஷம் குடித்துள்ளது தெரியவந்தது. மக்கள் குறை கேட்புக் கூட்டத்தின் போது, அப்பெண்மணி ஏன் விஷம் குடித்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்ததில், அவர் அவலூர்பேட்டையைச் சேர்ந்த ஜெயவேல் என்பவரது மனைவி அர்ச்சனா என்பதும், இவரது வீட்டு சொத்துப் பிரச்சனை காரணமாக அவரது உறவினர்கள் சிலர் அவரது வீட்டை இடித்ததாகவும், இது குறித்து அரசு அதிகாரிகள் போலீசாரிடம் அர்ச்சனா புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மனமுடைந்த அர்ச்சனா ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வரும் போது, வழியிலேயே விஷம் குடித்துவிட்டு அங்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

Advertisment

இதையறிந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அர்ச்சனா சம்பந்தப்பட்ட விவகாரத்தில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். ஆட்சியர் அலுவலக மக்கள் குறைகேட்புக் கூட்டத்தின் போது, பெண் விஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.