Skip to main content

தண்ணீரில் மூழ்கிய சகோதரிகள்... தொடரும் சோகம்! 

Published on 25/10/2020 | Edited on 25/10/2020
incident in villupuram

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயனார். இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு அபிநயா 14 வயது, வனிதா 10 வயது, வினிதா 7 வயது என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் அய்யனார் சில மாதங்களுக்கு முன்பு இறந்து போனார். அவரது தாயார் சுகுணா பராமரிப்பில் பிள்ளைகளை வளர்ந்து வருகிறார்கள்.

மூவரும் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் சகோதரிகள் மூன்று பேரும் சத்தியமங்கலத்தில் இருந்து சொக்கநந்தல் செல்லும் சாலையில் உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையோரம் உள்ள பண்ணை குட்டையில் குளிக்க சென்றுள்ளனர். தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது, வனிதா நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளார். இதைப்பார்த்த அவரது மூத்த சகோதரி அபிநயா தங்கையை காப்பாற்ற முயன்ற போது அவரும் தண்ணீரில் மூழ்கி இருவரும் தத்தளித்தனர். இதைப்பார்த்த வினிதா குட்டையில் இருந்து கரையேறி விளிம்பில் நின்று கொண்டு கத்திக் கூச்சலிட்டு கத்தியுள்ளார்.

அவரது கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரில்மூழ்கிய அபிநயா வனிதா ஆகிய இருவரையும் வெளியே கொண்டுவந்தனர். இதில் வனிதா சம்பவ இடத்திலேயே  இறந்துவிட்டார். அபிநயா செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டவுடன் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்பிள்ளைகள் தண்ணீர் மூழ்கி அதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்த சத்தியமங்கலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்