வேலூர் மாவட்டம், பாகாயம் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த தச்சு வேலை செய்பவரின் மகள் 10-ம் வகுப்பு தேர்வெழுதியுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள், சிறுமி குளிக்கும்போது ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் சிறுமி கடந்த 13-ம் தேதி தன்மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
90% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஜூன் 16 ந்தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலம் மற்றும் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்த பாகாயம் போலீஸார், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கணபதி, ஆகாஷ் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்தனர். அதில் கணபதி, ஆகாஷை குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர். 17 வயதான பாலாஜி என்கிற சிறுவனை கரோனாவை காரணம் காட்டி ஜாமினில் விடுவித்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், முன்னாள் எம்.எல்.ஏ. லதா தலைமையில் ஜூன் 18-ம் தேதி மாலை வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.